பெண் பிள்ளைக்கு ‘வேண்டாம்’ என பெயரிட்ட பெற்றோர்! இன்று பலராலும் ‘வேண்டும்’ என பயன்படுத்தப்படும் சாதனை மாணவி!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால், மூன்றாவது பிறக்கும் பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் சூட்டுவார்களாம். அப்படி பெயர் சூட்டினால் தான் அவர்களுக்கு நான்காவதாக ஆண் குழந்தை பிறக்கும் என்பது அந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை.
இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த அசோகன், கௌரி என்ற தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த பெண்குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த குழந்தை அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பின் அரசு உதவியுடன் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்றுள்ளார். இவரது பள்ளி மற்றும் கல்லூரி காலகட்டங்களில், அவருடன் பயின்ற சக மாணவர்கள் அந்த பெண்ணை வேண்டாம், வேண்டாம் என சொல்லி கிண்டல் செய்வார்களாம்.
இதனை அவர் தனது பெற்றோரிடம் சொல்லி வேதனை படுவாராம், அதன்பின் அவரது பெற்றோர்கள் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, பெயரை மாற்றிக் கொள்ளலாம் என ஆறுதல் கூறி வந்துள்ளனர். பொறியியல் கல்லூரியில் பயின்ற மாணவி, கல்லூரி வளாகத்தில் நடந்த நேர்காணலில், தன்னால் உருவாக்கப்பட்ட தானியங்கி கதவை ஜப்பான் நிறுவனத்திடம் அறிமுகம் செய்துள்ளார்.
இதனையடுத்து, இந்த ஜப்பான் நிறுவனம், இந்த மாணவி எங்களுக்கு வேண்டும் என, ஆண்டுக்கு 22 லட்சம் சம்பளத்தில் அந்த மாணவியை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில், சிறப்பு தூதுவராக இந்த மாணவியை நியமித்து, பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.