“மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம்!”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், மதுரையில் நேற்று பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தகுதி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. அதில் கலந்துகொண்ட பின், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்து வருவதாக தெரிவித்தார். மேலும், மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம் என குற்றம் சாட்டிய அவர், மாணவர்களுக்காக தமிழக அரசு போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.