சென்னை அரசுப் பேருந்துகளில், பேனிக் பட்டன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள்.!
சென்னை அரசுப் பேருந்துகளில், பெண்களின் பாதுகாப்புக்காக பேனிக் பட்டன்கள் பொருத்தப்பட உள்ளன.
மத்திய அரசின் நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளில் பாதுகாப்பு கருவிகள் பொருத்துவதற்காக ரூ.72.25 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (ஐசிசிசி) திறந்து வைத்தார், பேருந்தில் அவசரச் சூழல் ஏற்பட்டால், பேனிக் பட்டனை அழுத்தினால், பேருந்துகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம், ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டு, விரைவில், இந்த கட்டுப்பாடு மையத்திற்கு(ஐசிசிசி) எச்சரிக்கை அனுப்பப்படும்.
புகார் உறுதி செய்யப்பட்டவுடன், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது, இரண்டாம் கட்டமாக, மொத்தம் 1,830 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், மொபைல் நெட்வொர்க் ரெக்கார்டர், பேனிக் பட்டன்கள், லவுட் ஸ்பீக்கர்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள், உட்பட 63 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.