Ambur : பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவியை காணவில்லை.? கணவர் பரபரப்பு புகார்.!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவியாக கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் இந்துமதி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும், அந்த ஊராட்சி மன்ற தொகுதி பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்துமதி.
இதனை அடுத்து மாற்றுசமூகத்தினர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இந்துமதியை ஊருக்குள் வரக்கூடாது என கூறி அவர்களை ஊரை விட்டு தள்ளிவைத்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊருக்கு வெளியே கணவர் பாண்டியனுடன் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு புகார்களை இந்துமதியும் அவரது கணவரும் அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்துமதி கணவர் பாண்டியன் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் தனது மனைவியும், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவியுமான இந்துமதியை காணவில்லை என்றும்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் ஊருக்கு வெளியே வசித்து வருகிறோம் என்றும், எங்களை ஊருக்குள் வரக்கூடாது என்றும் கிராம மக்கள் தடுத்து நிறுத்துவதாகவும் எங்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் கணவர் பாண்டியன் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பெயரில் இந்துமதியை தேடுவதற்கு ஆம்பூர் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.