12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 5,606 மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளி பூந்தமல்லியில் கணினி மூலம் தேர்வெழுதி வருகிறார்.

சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர். மொத்தம் 3316 தேர்வு மையங்களில் இந்த பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று 12ஆம் வகுப்பு பொதுதேர்வானது மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில், 7,518 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 8,21,057 மாணவ மாணவியர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை தேர்வு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 10 தேர்வு மையத்திற்கு ஒரு பறக்கும்படை வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5000க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் உள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 64,994 மாணவ மாணவிகள் 583 பள்ளிகளில் தேர்வு எழுத உள்ளனர்.
மாற்று திறனாளிகள் உதவியாளர் மூலம் தேர்வுகளை எழுத உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் உடல்நிலை குறித்த உரிய மருத்துவ சான்றுகளை சரிபார்த்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 5,606 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஏற்பாடு மூலம் தேர்வு எழுத உள்ளனர். முதல் முறையாக பூந்தமல்லி தேர்வு மையத்தில் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் கணினி வாயிலாக தேர்வுகளை எழுத உள்ளார்.
தேர்வு குறித்து ஏதேனும் புகார் இருந்தால் புகார் தெரிவிக்க உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. 9498383075, 9498383076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தேர்வு குறித்த புகார்களை அளிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் எழுந்த பள்ளியின் மேற்பார்வையாளர் குழுவை தொடர்புகொண்டு உடனடியாக அவை தீர்க்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.