Palladam : பல்லடம் படுகொலை.. உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார் என்பவர், அருகே கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சொந்தமான இடத்தில் சிலர் மது அருந்த வந்துள்ளனர். அதனை தடுத்து மது அருந்த கூடாது என செந்தில் குமார் கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து முதலில் அங்கிருந்து புறப்பட்ட அந்த கும்பல் அடுத்ததாக ஆயுதங்களுடன் வந்து, செந்தில்குமாரை அவரது வீட்டருகே அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது. இதனை பார்த்த செந்தில்குமாரின் சித்தி புஷ்பவதி , தம்பி மோகன்ராஜ் மற்றும் சித்தி ரத்தினாம்மாள் ஆகியோர் செந்தில்குமாரை காப்பாற்ற, அந்தக் கும்பலை தடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அந்த கும்பல் செந்தில் குமார் குடும்பத்தாரையும் கடுமையாக தாக்கியுள்ளது. இதனை அடுத்து, சம்பவ இடத்திலேயே செந்தில் குமார் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட அவரது உறவினர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை விசாரணையில், திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடேசன் முக்கிய குற்றவாளி என்றும், திருச்சியை சேர்ந்த செல்லமுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேனியை சேர்ந்த முத்தையா என்பவரும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த செந்தில்குமார் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் பல்லடம் அரசு மருத்துவமனையில் செந்தில் குமார் உறவினர்கள் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட 4 பேரின் உடல் இன்று மாலை 5 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்க இருந்தது.
ஆனால், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என திருச்சி – கோவை நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, தமிழக முதல்வர் வெளியிட்ட செய்தி குறிப்பில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண தொகையையும் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.