மருத்துவக்கழிவு விவகாரம் : எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என பழனிசாமி துடிக்கிறார்! – தங்கம் தென்னரசு பதிலடி!
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் துடித்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில், இதனால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியதோடு திமுகவை விமர்சித்தும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருந்தார். அதில் “கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் மு.க.ஸ்டாலின் முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பாரா விதமாக நடக்கும் ஓரிரு நிகழ்வுகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர்பகுதிகளில் சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டுவந்து கொட்டப்படுகிறது என புகார் வந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்ததன் பேரில், கழிவுகளை கொட்டிய சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த மனோகரன், மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இதுகுறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு – கேரளா எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என கூறியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகால அடிமை அதிமுக ஆட்சியில் தான், கோவை, தேனி , திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாடு கேரளா எல்லையோர பகுதிகளில், கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக கழிவுகளை கொண்டுவந்து கொட்டி தமிழ்நாடே கேரளாவின் குப்பைத்தொட்டியாகி கிடந்தது. 2016 ஆம் ஆண்டு “மருத்துவக் கழிவுகள்…
— Thangam Thenarasu (@TThenarasu) December 19, 2024