பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!
உளவுத்துறை தோல்வி அடைந்திருக்கிறது என்பதையே இந்த தாக்குதல் காட்டுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக அரசியல் தலைவர்கள் வரை கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு அமித் ஷா பதவி விலகவேண்டும் எனவும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” காஷ்மீரில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாதத்தை கடுமையாக நசுக்கவேண்டும்.
இந்த நேரத்தில் நான் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பாஜக அரசினுடைய தவறான கொள்கைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் குறித்து அவர்கள் எடுத்த அந்த நடவடிக்கை தான் இந்த விளைவுகளை உருவாக்கியிருப்பதாக நான் நினைக்கிறேன். அதுமட்டுமின்றி உளவுத்துறை தோல்வியடைந்து இருக்கிறது என்பதை தான் இந்த சம்பவம் உறுதிப்படுத்தியிருக்கிறது. முன்னதாக தீவிர வாதிகளை நாங்கள் ஒலுத்துவிட்டோம் இனிமேல் சுற்றுலா பயணிகள் வரலாம் என்றெல்லாம் சொன்னார்கள்.
சுதந்திரமாக இனிமேல் சுற்றுலா அங்கு போகலாம் என்று சொன்னார்கள். அதனுடைய அடிப்படையில் தான் நம்பி போன சுற்றுலா பயணிகள் இன்று படுகொலை ஆகியிருக்கிறார்கள். எனவே, இந்த விஷயத்திற்கு அமித் ஷா பொறுப்பேற்று உடனடியாக பதவி விலகவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிறுத்துகிறது எனவும் திருமாவளவன் பேசியுள்ளார்.