“சாலைப்பணி டெண்டரில் பேக்கேஜ் முறை ரத்து;கி.ரா.வுக்கு நினைவிடம்”- அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு..!
மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு நினைவிடம் மற்றும் சாலைப் பணி டெண்டரில் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது,சட்டப்பேரவையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, “முன்னாள் முதல்வர் கருணாநிதி வகித்த பொதுப்பணித்துறையை எனக்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறி நன்றி தெரிவித்து,முக்கிய திட்டங்களை அறிவித்தார்.அதன்படி,
- சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாகக் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும், சென்னை துறைமுகத்திலிருந்து மணலி திருவொற்றியூர் ஆகிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கடல் பாலம் அமைக்கப்படும்.
- சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால், ஆக.30 முதல் O.M.R சாலையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தப்படும்.
- அதன்படி, பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படும்
- தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு நினைவிடம் மற்றும் சாலைப் பணி டெண்டரில் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவிடம் கட்டப்படும்.
ஒரு கோட்டத்தில் ஒரே ஒப்பந்ததாரர் சாலை பணிகளை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.மேலும்,தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தரமற்ற சாலைகளை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.