சற்று முன்…காங்.மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல்!
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில்,நாளை (மே 31-ஆம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து.
இதனிடையே,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.அதன்படி,திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில்,திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம்,கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவர் என்றும்,ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான கிரிராஜன்,ராஜேஷ்குமார்,கல்யாணசுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இருதினங்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதனையடுத்து,தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பி பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில்,காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,எம்பி ஜோதிமணி உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர்.
Chennai | P Chidambaram files nomination as Congress candidate for the biennial election to the Rajya Sabha from Tamil Nadu pic.twitter.com/LaHL324uVh
— ANI (@ANI) May 30, 2022
இதனிடையே,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்துப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.