தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி தொடக்கம்….!
நேற்று இரவு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை இன்று காலையில், விநியோகிக்கும் பணிகள் தொடங்கியது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனாவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதிகள் அதிகரித்துள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பல கட்ட போராட்டங்களுக்கு பின், உச்சநீதிமன்றமும், தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதி அளித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது. ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இரவு பகலாக உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்த பணிகள் முடிக்கப்பட்டு அதில் உற்பத்தி பணிகள் தொடங்கியது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில், உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன்களை வெளியே கொண்டு வருவதற்கான கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டது. நேற்று இரவு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை இன்று காலையில், விநியோகிக்கும் பணிகள் தொடங்கியது.
இதனையடுத்து, ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் புறப்பட்டது. இதனை கண்காணிப்பு குழு தலைவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில் ராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னை, மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.