கருமுட்டை விவகாரம் – மற்றுமொரு ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு
சேலம் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு மருத்துவத்துறை இணை இயக்குனர் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது. கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில்,இன்று காலை சுதா மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ இணை இயக்குனர் பிரேமகுமாரி சீல் வைத்தார். அதனை தொடர்ந்து தற்போது, சேலம் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு மருத்துவத்துறை இணை இயக்குனர் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும், சிகிச்சையிலுள்ள நோயாளிகள் வெளியேறிய பின் மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.