பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!
ஜனவரி 19ஆம் தேதியன்று சென்னைக்கு மதுரை மற்றும் தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு இந்த வாரம் முழுக்க விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர் விடுமுறையை அடுத்து சென்னையில் தங்கி வேலை பார்க்கும் நபர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு குறிப்பாக தென்னக பகுதிவாசிகளுக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கபட்டது. அதே போல அவர்கள் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதை கருத்தில் கொண்டு சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் ஜனவரி 19 (ஞாயிற்றுகிழமை) மாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் – 06168) புறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரையில் இருந்தும் சென்னைக்கு MEMU சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மதுரை முதல் சென்னைக்கு செல்லும் ரயிலும் (வண்டி எண் 06062) ஜனவரி 19ஆம் தேதி ஞாயிறன்று மாலை 4 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முன்பதிவில்லா ரயில் என அறிவிக்கப்பட்டுள்ளது.