டைப் 2 டெங்கு காய்ச்சல் பாதிப்பு: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது – ஓபிஎஸ்

Default Image

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலை குறித்த அச்ச உணர்வு பொது மக்களிடையே இருந்து வருகின்ற சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருக்கின்ற சூழலில், டெங்கு பாதிப்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவெடுத்து உள்ளதாகவும், உருமாறிய டைப் 2 வகை டெங்கு, இப்போது இந்தியாவில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வகை டெங்கு, மூளைக் காய்ச்சல் உட்பட பல மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உடையது.

இந்த டைப் 2 டெங்கு பாதிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கான உள்ளிட்ட 11 மாநிலங்களில் பரவி வருவதாகவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து அதன் அடிப்படையில், மேற்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

டெங்கு வைரஸ், தண்ணீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. தமிழ்நாட்டில் இடங்களில் ஆங்காங்கே பல பெய்யத் துவங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்க இருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, சாலைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், வீடுகளில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்கள் நடப்பதை தவிர்ப்பதும் மிகமிக அவசியம்.

வருமுன் காப்போம் என்பதற்கேற்ப டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் கடமை மாநில அரசிற்கும், பொதுமக்களுக்கும் உண்டு.

எனவே, தமிழக முதலமைச்சர், இதில் தனிக் கவனம் செலுத்தி, டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும். இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், பொது இடங்களில் சுகாதாரப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளவும் தக்க அறிவுரைகளை தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்