எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி! முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ (UNESCO) 1999ல் இந்த நாளை மொழிவழி உரிமைகளுக்காக உயிரிழந்தவர்களை நினைவுகூர அறிவித்த நிலையில், அப்போதிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தாய்மொழி தினம் என்பதால் சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி” என புல்லரிக்க வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,“ புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது. தமிழ்நாடு அரசு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும்” என கூறியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் ஹிந்தி திணிப்பா? என பலரும் கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.
அதன்பிறகு, இந்தியை திணிக்கவில்லை என அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசி இருந்தார். இருப்பினும் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. எனவே, இதன் காரணமாக தான் எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என்கிற வரியை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும்… pic.twitter.com/qz9vW730HN
— M.K.Stalin (@mkstalin) February 21, 2025