அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்கள் இலக்கு – கே.பாலகிருஷ்ணன் பேட்டி
அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதால் இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – மார்க்சிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவது என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சி அமையவேண்டும். பாஜக தமிழகத்தில் நுழைந்துவிட அனுமதிக்க கூடாது. அதிமுக ஆட்சி படுதோல்வி அடையக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். இந்த கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதால் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்டோம். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கு நாங்கள் பாடுபடுவோம், செயலாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தல் வரும் போது திமுகவுடன் அதுகுறித்து பேசப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் பலத்திற்கு ஏற்ப போட்டியிட வேண்டும் என்று விரும்புவது வழக்கமான ஒன்றுதான். இந்த முறை நாங்களும் விரும்பினோம், ஆனால் ஒரு கூட்டணி என்று வரும்போது அதிமுக – பாஜக என்ற கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று ஒரு கட்டாயம் இருப்பதால், அனைவரும் இந்த உடன்பாடை ஏற்று செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம் என கூறியுள்ளார்.
எங்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. இதில் மகிழ்ச்சி, வருத்தம் என்று சொல்லமுடியாது. அதிமுக – பாஜக கூட்டணியை முறியடிப்பது என்பதுதான் இலக்கு. அதிகமான இடங்கள் கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என கூறியுள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விருப்பும் உத்தேச பட்டியலை திமுகவிடம் கொடுக்க இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.