“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!
மக்களிடம் எப்படி வாக்கு வாங்குவது என்பது மட்டுமே நமது குறிக்கோள் இல்லை. மக்களோடு ஒன்றிணைய வேண்டும் என தவெக தலைவர் விஜய் பேசினார்.

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அக்கட்சி தலைவர் விஜய் தலைமையேற்றி நடத்தி வருகிறார். உடன் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் தேர்தல் சமயத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக முதலில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தல் வியூகம் தொடர்பான வழிகாட்டு புத்தகம் மற்றும் பென் டிரைவ் ஆகியவற்றை விஜய் வழங்கினார்.
இதனை அடுத்து பேசிய தவெக தலைவர் விஜய் இன்று தனது உரையை மிக சுருக்கமாக முடித்துக்கொண்டார்.அதில், பூத் கமிட்டி உறுப்பினர்கள் வாக்குகளை மட்டும் குறிக்கோளாக வைத்து தேர்தல் பணிகளை செய்ய வேண்டாம் என்றும், மக்கள் பிரச்சனைகளை கேட்டறியுங்கள் என்றும் கூறினார்.
விஜய் பேசுகையில், ” கோவை என்றாலே மரியாதை தான் நியாபகம் வரும். இங்கு நடப்பது பூத் கமிட்டி பயிற்சி போல தெரியவில்லை. வேறு எதோ நிகழ்வு போல தெரிகிறது. இந்த பயிற்சி பட்டறையில் இதுவரை பலர் செய்ததை நாம் செய்யப்போறது இல்லை. ஆட்சிக்கு வந்தபிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும்.
ஆட்சிக்கு வருவதே மக்கள் நலனுக்காக தான். மக்களிடம் எப்படி வாக்கு வாங்குவது என்பது மட்டுமே நமது குறிக்கோள் இல்லை. மக்களோடு எப்படி ஒன்றிணைய வேண்டும் என பயிச்சி அளிக்கும் பட்டறை தான் இது. இதுவரை பலர் வந்திருக்கலாம் போயிருக்கலாம். பலர் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், இனி அது நடக்காது.
நேரடி தேர்தல் களப்பணியில் மக்கள் மனதில் மாற்றம் கொண்டுவருவது பூத் கமிட்டியாக நீங்கள் தான். மக்களிடம் நமது கொள்கைகளை எடுத்து சொல்லுங்கள். நம்மிடம் நேர்மை இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. பேசுவதற்கு உண்மை இருக்கிறது. செயல்பட திறமை இருக்கிறது. நம்மிடம் நம்பிக்கை இருக்கிறது. உழைக்க தெம்பு இருக்கிறது. அர்ப்பணிப்பு குணம் இருக்கிறது. களம் இருக்கிறது. நம்பிக்கையுடன் உழைத்திடுடுங்கள். நம்பிக்கையோடு இருங்கள் வெற்றி நிச்சயம்.” என சுருக்கமாக தனது அறிவுரைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார் தவெக தலைவர் விஜய்.