‘நமது முதலமைச்சர் விஜயகாந்த்’- எல்.கே.சுதீஷின் பதிவால் பரபரப்பு…!

தேமுதிகவின் துணைச் செயலாளரான எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு அமைச்சர் தங்கமணி இல்லத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அனகை முருகேசன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, பாமகவுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தேமுதிகவினர் கேட்டுள்ளனர்.
ஆனால் தேமுதிகவுக்கு 12 தொகுதிகளை மட்டுமே அளிக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவினர் வரவில்லை என்று கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் துணைச் செயலாளரான எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுமா அல்லது நிலைத்து நிற்குமா என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.