உடல் உறுப்பு தானம் – உடல் உறுப்பு தானம் செய்வதற்கான படிவத்தை அமைச்சரிடம் ஒப்படைத்த திரைத்துறையினர்..!

Minister Ma Subramanian

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடக்கும் என கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில், மூளை சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலு, தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தார். தமிழகத்தில் முதல் முறையாக உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய அரசு ஊழியர் வடிவேலுவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர்கள் சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், நடிகர் சியாம் செல்வன் உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரைத்துறை இயக்குனர்கள் சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், நாயகன் சியாம் செல்வன், நாயகிகள் நக்‌ஷா சரண், ரக்‌ஷனா உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்குரிய படிவங்களை இன்று காலை நம்மிடத்தில் ஒப்படைத்தனர் மனிதநேயம் மிக்க அவர்களுடைய இச் செயல் பாராட்டுக்குரியது மற்றவர்களுக்கு முன்னுதாரணமானது.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்