ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் அவசர சட்டம் -அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டமசோதா கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி பேட்டி.
ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் பண இழப்பு காரணமாக, பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனனர். இதனை தடை செய்ய சிறப்பு சட்டம் இயற்றுமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டமசோதா கொண்டு வரப்படும். எந்த நீதிமன்றத்தாலும் ரத்து செய்ய முடியாத வகையில், வலுவான சட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு மசோதா தொடர்பாக ஆளுநர் மாளிகை எழுப்பிய சந்தேகங்களுக்கு, உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. இதுவரை எந்த வித பதிலும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.