ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு – கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமாறு அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் நியாயவிலை கடைகளில் மக்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது. இந்த மளிகை பொருட்களில் காலாவதியான டீ தூள் இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமாறு அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் அவர்கள் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காலாவதியான பொருட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அப்படி இருந்தால் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அத்தியாவசிய பொருட்களின் இருப்பு,வரவு விற்பனை ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.