எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூ.7500 வழங்க உத்தரவு
எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் சத்து உணவிற்காக மாதம் ரூ.7500 வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள்.இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள்தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கவும் ,அதனை டெபாசிட் செய்யவும் ,அவருக்கு 450 சதுர அடிக்கு குறையாமல் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு கட்டி கொடுக்கவும் , நிரந்தர வேலை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.அப்பொழுது, எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் சத்து உணவிற்காக மாதம் ரூ.7500 வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த பெண்ணிற்கு இளநிலை உதவியாளர் பதவியும் வழங்குவது குறித்தும் ,தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அந்த பெண்ணிற்கான மருத்துவ வசதிகள் அளிக்க ஏதேனும் அளிக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பதில் அளிக்கவும், வழக்கினை ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.