அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நிலைப்பாடு – வைத்திலிங்கம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. இதுபோன்ற செயல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.
இந்த சமயத்தில் ஓபிஎஸ், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார், அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்திலிங்கம் அவர்களிடம், அதிமுக கட்சி தொடர்பான வழக்குகளில் ஓபிஎஸ் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், திரைப்படங்களில் வில்லனிடம் தொடர்ந்து அடி வாங்கி கொண்டே இருப்பார் ஹீரோ. ஆனால், இறுதியில் ஹீரோவின் ஒரே அடியில் வில்லன் அவுட்டாகி விடுவார். அந்த கதைதான் நடக்கும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நிலைப்பாடு. ஓபிஎஸ் விரைவில் சசிகலாவை சந்திப்பார் என தெரிவித்துள்ளார்.