ஓ.பி.எஸ்-யின் அடுத்த மூவ்! செப்.3 முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்று மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஒன்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டனர்.
ஒரு கட்டத்தில் இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறார். இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இது ஓபிஎஸ்-க்கு பெரும் அடியாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்தது. உச்சநீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது. இதுபோன்று சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியும் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தார். இருப்பினும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
இது ஓபிஎஸ்க்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் சட்ட போராட்டம் தொடரும் எனவும் ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர். மறுபக்கம் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றதால், ஓபிஎஸ் புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஒரு காலத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் ஓபிஎஸ்-ன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த கட்ட மூவாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். அதன்படி, செப்.3-ல் காஞ்சிபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த சட்டரீதியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வராத நிலையில், தற்போது தொண்டர்களை நம்பி அவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டிடிவியுடன் இணைந்து களமிறங்குவாரா அல்லது புதிய கட்சியை தொடங்குவாரா? அல்லது தேர்தலில் இருந்து விலகி இருப்பாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.