ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது கண்டனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்படும் ஆவின் இனிப்பு பொருட்களின் விலை அண்மையில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.
அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்ப்பை தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, ‘ ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளில் வி லைகளை உயர்த்தி தொடர்ந்து மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்!’ என பதிவிட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
‘ஆட்சியைப் பிடிப்பதற்காக நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி, “சொன்னதை செய்வோம், செய்வதையே சொல்வோம்” என்ற வீர வசனத்தை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, அதன் மூலம் ஆட்சியைப் பிடித்த தி.மு.க., “சொன்னதை செய்யமாட்டோம், சொன்னதற்கு முரணாக நடப்போம்” என்ற வழியில் “மக்கள் விரோத மாடல்” ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தாததோடு கூடுதல் மின் கட்டணத்தை மக்கள்மீது சுமத்தியுள்ளது.
பொருளாதாரம் மேம்படாத நிலையில் சொத்து வரி 100 விழுக்காடு, 150 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தபின் அகவிலைப்படிக்கே அல்லல்பட வேண்டியிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகவிடும் என்று மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. இப்போது க்யூட் தேர்வு வேறு வந்துவிட்டது.
“திராவிட மாடல்” என்று சொல்லிக் கொண்டு, மக்களை வாட்டி வதைக்கின்றது. அந்த வகையில், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டாலும், அந்த இழப்பை ஏற்படுத்தும் வகையில், ஆவின் பொருட்களான தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம் வகைகள் பன்மடங்கு உயர்த்தப்பட்டன. உதாரணமாக தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அரை லிட்டர் தயிரின் விலை 27 ரூபாய்,
அதாவது, ஒரு லிட்டர் 54 ரூபாய் என்றிருந்தது. இன்றைக்கு அதே தயிர் அரை லிட்டர் 35 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை 515 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு அந்த நெய்யின் விலை 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 80 ரூபாயாக இருந்த 200 கிராம் பாதாம் பவுடர் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சிறிய ஐஸ்க்ரீம் விலைகளும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன. இதற்குக் காரணம் கேட்டால் ஜி.எஸ்.டி. என்று தி.மு.க. அரசு விளக்கம் தரும். ஆனால், அதையும் தாண்டி விலை உயர்த்தப்பட்டது என்பதுதான் யதார்த்தம். இதற்கிடையில் எடை குறைப்பு வேறு! இது போதாது என்று, தீபாவளிப் பண்டிகை வர இருக்கின்ற இந்தத் தருணத்தில், ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, இனிப்பில்லாத ஒரு கிலோ கோவா 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், பேரிச்சை கோவா அரை கிலோ 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும், கால் கிலோ ரசகுல்லா 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரை கிலோ மைசூர்பா 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே, இனிப்பான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கசப்பான மருந்துகளையே தொடர்ந்து மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற மக்கள் விரோத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாகிறது. ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக் கொண்டு மக்களை வஞ்சிக்கின்ற தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஆவின் பொருட்களின் விலை உயர்வினை திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியினால் ஏழையெளிய மக்கள் விரக்தியின் விளிம்பிற்கு சென்று கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்கள். எனவே,
மக்களை வாட்டி வதைக்கும் செயலைக் கைவிட்டுவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் வடிக்கும் கண்ணீர் தி.மு.க. ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.’ என தனது அறிக்கையில் விரிவாக தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…