இபிஎஸ் தலைமையை ஓபிஎஸ் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – அர்ஜுன் சம்பத்
திமுக அமைச்சர்களை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் 13 கோரிக்கைகள் அடைங்கிய மனுவை அளித்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அர்ஜுன் சம்பத், சுதந்திர போராட்ட தியாகி வீர சாவர்க்கரை இழிவாக பேசிய ராகுல் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் விசிக தலைவர் திருமாவளவனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் திமுகவை சேர்ந்தவர்கள் மட்டுமே அறங்காவலர் பதவியில் நியமிக்கப்பட்டு வருவதாக குற்றசாட்டிய அவர், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களை மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார். வரும் 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட உள்ள ஊழல் பட்டியலில் இடம்பெறும் திமுக அமைச்சர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும், இபிஎஸ் தலைமையை ஓபிஎஸ் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.