இபிஎஸ் உறுதிமொழியை தொடர்ந்து ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் உறுதிமொழி.! தொண்டர்களை ஒருங்கிணைப்போம்…
ஜெயலலிதா நினைவிடத்தில் ‘தொண்டர்களை ஒன்றிணைப்போம். அதிமுகவை வெற்றியடைய செய்வோம். ‘ என ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
காலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அடுத்ததாக தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் எதிரிகளை விரட்டியடிப்போம், தூரோகிகளை தூள் தூளாக்குவோம். குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம் போன்ற உறுதிமொழிகளை இபிஎஸ் மற்றும் தொண்டர்கள் எடுத்துக்கொண்டனர்.
அதே போல, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி மேற்கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், இபிஎஸ்-ஐ போல, ஓபிஎஸும் தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ‘தொண்டர்களை ஒன்றிணைப்போம். அதிமுகவை வெற்றியடைய செய்வோம். ‘ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற நிலையை மீண்டும் உருவாக்குவோம் எனவும் ஓபிஎஸ் தரப்பினர் சூளுரை மேற்கொண்டனர்.