சசிகலா குறித்து மவுனம் காக்கும் ஓபிஎஸ்., மீண்டும் பழைய செய்தியை வெளியிட்ட நமது எம்ஜிஆர் நாளிதழ்.!
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க ஓபிஎஸ் ஆதரவு என்ற செய்தியை நமது எம்ஜிஆர் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு சிறை தண்டனை முடிந்து இரு தினங்களுக்கு முன் தமிழகம் திரும்பியுள்ளார். அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்த்துக்கொள்ள முடியாது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்து வரும் முதல்வர் பழனிசாமி, சசிகலா குறித்து மறைமுகமாக பேசிருக்கிறார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலா வருகைக்கு பின்னர் கருத்து ஏதும் இதுவரை தெரிவிக்கவில்லை. மவுனமாக இருந்து வருகிறார். இதனால் ஓபிஎஸ்யின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிமுகவில் பல்வேறு கருத்துகள் நிலவுகிறது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வருவதற்கு ஆதரவு தெரிவித்து, ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்தியை சசிகலா கட்டுப்பாட்டில் உள்ள நமது எம்ஜிஆர் நாளிதழ் இன்று மீண்டும் வெளியிட்டுள்ளது. இதனிடையே, பதவி சண்டையால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் இன்னமும் நீடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இதனை உறுதிபடுத்தும் வகையிலேயே ஜெயலலிதாவிடம் விஸ்வசமாக இருந்ததை சுட்டிக்காட்டி நிகழ்கால பரதன் என்ற தலைப்பிலும், தனது சாதனைகளை பட்டியலிட்டும் பத்திரிகைகளில் ஓபிஎஸ் விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நமது எம்ஜிஆர் நாளிதழில் அதிமுக பொதுச்செயலாளராக ஓ பன்னீர்செல்வம் ஆதரவு என்ற பழைய செய்தியை தற்போது வெளியிட்டுருப்பது பல்வேறு வியூகங்களை ஏற்படுத்தியுள்ளது. குழப்பத்தில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தை தங்களது பக்கம் இழுப்பதற்கான சசிகலா தரப்பின் வியூகமாகவும் இது இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.