தர்ம யுத்தத்தின் போது அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்த விவகாரம்… ஒபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ மீதான தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை…
- அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம். கொண்டு வந்த எடப்பாடி
- இதில் வாக்களிக்காத ஆளும் தரப்பு கட்சியினருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக பதவி ஏற்ற உடன் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.அப்போது அதிமுக பிளவுபட்டு தர்மயுத்தம் நடத்திய தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 வாக்குகள் என்ற பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி கவிழவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானமும் வெற்றி பெற்றது.
இதனால் சொந்த கட்சியின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தி.மு.க.ழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி அவர்களது மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது. இதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் சக்கரபாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோரும் கோர்ட்டில் முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும்போது, அது தொடர்பான கேள்விக்குள் நீதிமன்றம் ஏன் செல்ல வேண்டும்? என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ந்தேதி உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வுக்கு முன் திராவிட முன்னேற்ற கழகத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி ‘11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பட்டியலிடுமாறு’ கேட்டுக் கொண்டார். மேலும், அண்மையில் மணிப்பூர் மாநில வனத்துறை அமைச்சர் ஷியாம் குமார் தகுதி நீக்கம் தொடர்புடைய வழக்கில், நான்கு வாரத்தில் முடிவு செய்யுமாறு அதன் சட்டப் பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கபில் சிபல் சுட்டிக்காட்டினார். அப்போது, இந்த வழக்கை அவசர விசாரணைக்காக பட்டியலிடுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இந்த வழக்கு பிப்ரவரி 4-ந்தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.