ஓபிஎஸ் தவறான முடிவெடுத்து இன்று மோசமான நிலையில் உள்ளார் – டிடிவி தினகரன்

Default Image

அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி சசிகலா ஓய்வில் இருக்கிறார். பிப் 24ஆம் தேதி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலுள்ள அம்மா திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்துவார். அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்கும், திமுகவுக்கும் எதிரான வாக்குகள் அமமுகவிற்கு கிடைக்கும் என்றும் அதன் மூலம் அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம் எனவும் கூறியுள்ளார். திமுக மீதான அச்சம் மக்கள் மத்தியில் தற்போதும் உள்ளது, அது வாக்காக அமமுகவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மதுரையில் கருணாநிதி சிலையை வைக்க பெருந்தன்மையாக அனுமதி அளித்துள்ளதாக உதயகுமார் பேசுகிறார். இப்போது யார் திமுகவின் பி டீம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வேதியியல் மாற்றம் ஏற்பட்டு வருவதால் ஆட்சியாளர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அமமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இதுவரை யாரும் பேசவில்லை என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தார். சுதாகரனுக்கு அபராத தொகை செலுத்த பணம் இல்லை என்றும் அதனால்தான் காத்துக்கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். ஓபிஎஸ் பரதனாக இருந்தது உண்மைதான், அந்த பரதன் (ஓபிஎஸ்) தவறான முடிவெடுத்து இன்று மோசமான நிலையில் உள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராவணனுடன் சேர்ந்ததால், இன்றைக்கு இதுபோன்ற நிலைமையில் இருக்கிறார். பரதன், ராமர் கூட இருக்க வேண்டியவர், ராவணனுடன் சேர்ந்துவிட்டார் என்று தான் நான் சொன்னேன் என கூறியுள்ளார். ஓபிஎஸ் நிச்சயம் மன உளைச்சலில் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். சசிகலா அணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தால் நிச்சயம் வரவேற்பேன். பரதன் ஆகிவிட்டார் என்று நினைத்துக் கொள்வேன் என செய்தியாளர் கேள்விக்கு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்