எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி – ஓபிஎஸ் கடும் விமர்சனம்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து திமுகவின் ஊதுகுழலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டங்களை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும்.
இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும் என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி. இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை அதிமுக ஆதரிக்கிறது. இந்த நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் வளர்ச்சியே மிக முக்கியமாக இருக்கும் என்றும் இபிஎஸ் தனது வலைதள பக்கத்தில் பத்திவிட்டதாகவும் ஓபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இதுபோன்று கூறிவிட்டு தற்போது எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி அடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார். அதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக அரசு கொண்டுவந்த தனி தீர்மானத்தின் மீது பேசிய என்.தளவாய் சுந்தரம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து 2024 முதல் 2034 வரை 10 ஆண்டுகளுக்குள்ளான 10 கோரிக்கைகள் அளித்திருக்கிறோம்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
அதனை குழு மத்திய அரசுக்கு அனுப்பி, எங்களுடைய சாதகங்களையும், பாதகங்களையும் ஆராயும் நிலை வரும்பொழுதும், “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்கின்ற சூழ்நிலை உருவாகும்பொழுது, குழு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமானால், நாங்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம் என்று அரைகுறையாக, மழுப்பலாக குழப்பி இருக்கிறார் என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
2022-ல் 27 அமாவாசை என்று கூறியது, இப்போது 2034க்கு சென்றுவிட்டது எனவும் விமர்சித்துள்ளார். அது மட்டுமட்டுல்லாமல் இந்த தீர்மானம் அதிமுக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து, தெரிவது என்னவென்றால் திமுகவுடன் கைகோர்த்துவிட்டார் இபிஎஸ் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
திமுகவுடன் கைகோர்த்திருப்பது, ரகசிய உடன்பாடு செய்திருப்பது என்பது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு அடையாளம். அதிமுக மக்களுக்கான இயக்கம், இதற்கு முற்றிலும் முரணாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்திற்காக திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார்.
கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும் என கூறிய ஓபிஎஸ், இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும் என்றுள்ளார்.