அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை – ஐகோர்ட் உத்தரவு
அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், இதனை குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில் கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. இதுபோன்ற செயல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. இந்த சமயத்தில் ஓபிஎஸ், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
பாஜகவுக்கு தாமரை சின்னம்- விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்த வழக்குசென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு வழக்கு தொடர்ந்துள்ளதாக ஓபிஎஸ் தரப்பு கூறிய நிலையில் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய குறுகிய அவகாசம் கோரிய ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டும் அதே பதவியை ஓபிஎஸ் பயன்படுத்தி வருகிறார் என்றும் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே ஓபிஎஸ் குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் எனவும் இபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.