ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு…! இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்…!
கடந்த ஆண்டு ஜூலை 11-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பின், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுகவில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது; அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரியும் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கின் விசாரணை மொத்தம் 7 நாட்கள் நடைபெற்றது.
பின்னர் இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10:30 மணிக்கு, ஓபிஎஸ் உள்ளிட்டோர் 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பளிக்கிறது.