2024 தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேர்தல் அல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் வியூகம்.!
எனது பிறந்தநாள் விழாவானது, இந்திய அரசியலுக்கு புதிய தொடக்கமாக அமைய வேண்டும். ஆளும் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை சென்னையில் இதற்கான பிரமாண்ட விழா திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இந்தியா முழுவதும் இருந்து பிரதான முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அரசியல் தலைவர்கள் : இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் உட்பட, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் (ஜேகேஎன்சி) முன்னாள் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
2024 மக்களவை தேர்தல் : இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 2024 மக்களவை தேர்தல், கூட்டணி, பாஜக அரசு மீதான விமர்சனம் என பல்வேறு கருத்துக்களை தெரிவிதித்தார். அவர் கூறுகையில், பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுக ஆட்சியை நிரந்தரமாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் வைத்திருப்பேன் என சூளுரைத்தார்.
ஓரணி : அதன் பிறகு பேசிய முதல்வர், 2024 மக்களவை தேர்தல் என்பது, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேர்தல் இல்லை. அது யார் மீண்டும் ஆட்சி அமைக்க கூடாது என்பதை முடிவு செய்யும் தேர்தல் என கூறினார். அனைவரும் விட்டுக்கொடுத்து ஓரணியில் சேரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முதல்வர் காட்டம் : மேலும் பேசுகையில், ஒரு சிலர் காங்கிரஸ் அல்லாத 3வது அணி பற்றி பேசுகிறார்கள். காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது என குறிப்பிட்டார். அடுத்ததாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நட்டிவிட்டு, தற்போது வரை மதுரை எய்ம்ஸ்-க்கு 12 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளார்கள். ஒரு செங்கலை தாண்டி வேறு எதுவும் செய்ய செய்யவில்லை. இது தமிழ் மக்களை ஏமாற்றும் வேலை. தமிழகத்தை கேவலப்படுத்தும் வேலை. என காரசாரமாக தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
ஆன்லைன் சூதாட்டம் : அடுத்து ஆன்லைன் சூதாட்டம் பற்றி பேசிய முதல்வர், இதுவரை ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கிறார். மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால், என ஆளுநர் தடை செய்ய மறுக்கிறாரா என விமசித்தார்.
புதிய அரசியல் தொடக்கம் : இறுதியாக, தனது பிறந்தநாள் விழாவானது, இந்திய அரசியலுக்கு புதிய தொடக்கமாக அமைய வேண்டும். ஆளும் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். என கூறி தனது பிறந்தநாள் விழாவில் பேசி முடித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.