விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் – திமுக கூட்டணி அறிவிப்பு

Default Image

 விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,கடந்த 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்த நிலையில் உண்ணா விரதம் இருந்தனர் .விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் & நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உணர்வு பூர்வமாக தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும்-தனியாகவும் போராட்டங்களை நடத்தி வந்தாலும், இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு “குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத” சட்டங்களையும், “இலவச மின்சாரத்தை ரத்து செய்ய” கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை. இந்நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும், உணவுப் பாதுகாப்பிற்கு அடித்தளமாகவும் விளங்கும் விவசாயிகளையும்- அவர்களின் உரிமைகளையும் புறக்கணித்து; தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்குடனும்- ஆணவப் பேச்சுக்களுடனும் இப்போராட்டத்தைக் கையாளும் மத்திய பா.ஜ.க. அரசினையும் – அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்கத் தைரியமின்றி அடங்கி ஒடுங்கி இருக்கும் முதலமைச்சர் திரு பழனிச்சாமியையும் கண்டித்தும் – டெல்லியில் கொரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் – அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் – 18.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும். ஜனநாயக நெறிகளைப் பின்பற்றி, அறவழியில் விவசாயப் பெருமக்களுக்கு, தொடர்ந்து ஆதரவளிப்போம்! அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெற எந்நாளும் துணை நிற்போம்.இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்