அன்பை பரிமாறிக்கொண்ட எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள்… தமிழிசை, தமிழச்சி, ராதிகா சரத்குமார்…
Election2024 : இன்று வேட்புமனுத்தாக்கல் செய்த போது எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் அன்பை சக வேட்பாளர்களிடம் வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 27 என்பதாலும், இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதாலும் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்று வெகு தீவிரமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகம் சென்றதால் வடசென்னை, நீலகிரி போன்ற பல்வேறு இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டு, தங்கள் அன்பை பரிமாறிக்கொண்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. குறிப்பாக தென் சென்னையில், திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனும் , பாஜக சார்பில் போட்டியிட வந்த தமிழிசை சவுந்தராஜனும் நேருக்கு நேர் சந்தித்து கொண்ண்டனர். அப்போது இருவருமே ஒருவரை ஒருவர் அரவணைத்து நலம் விசாரித்து கொண்டனர்.
அடுத்ததாக, விருதுநகரில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்ய விருதுநகர் அலுவலகம் சென்று இருந்தார். அப்போது, பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் , பாஜக உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் வந்திருந்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சரத்குமார் சந்தித்து நலம் விசாரித்தார். அடுத்து, விஜய பிரபாகரை பார்த்து சரத்குமார் நலம் விசாரித்து தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்தினார்.
எதிரெதிர் கட்சியினர் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.