ஆபரேஷன் மின்னல்.. இதற்கான மர்மத்தை விளக்க வேண்டும் – ஈபிஎஸ்

Default Image

மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறையின் முக்கிய பொறுப்பாகும் என ஈபிஎஸ் அறிக்கை.

ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் விடியா அரசின் ஆட்சியில், நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 16 மாத கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரங்கள், போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரிப்பால் நிலைமை மிகமிக மோசமாகிவிட்டது.

இதனால் மக்களும், பெண்களும் வீதிகளில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியினரின் அராஜகமோ எல்லை மீறிப் போய்விட்டது. தறிகெட்டு ஓடும் குதிரைகள் போல், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள். திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். இப்போது அவரே தன்னால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று புலம்பியதை இந்த நாடே பார்த்தது. இவற்றிற்கு மேலாக, தமிழக டிஜிபி, ஆப்பரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3.905 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடுகிறார். இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,390 ரவுடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றம் எப்போதெல்லாம் கூட்டப்படும் என்ற செய்தி வருகிறதோ, அப்போதெல்லாம் இதுபோல் பல காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறும். இப்படி ஆப்பரேஷன் மின்னல் பற்றியும். இதன் காரணமாக ரவுடிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல்துறைத் தலைவரின் இந்த அறிக்கையை தமிழக மக்கள் படிக்கும் போதே, சென்னையை அடுத்துள்ள ஊத்துக்கோட்டையில் உள்ள வடக்கு மண்டல ஐ.ஜி. அவர்களின் பூர்வீக வீட்டில் திங்கட்கிழமை அன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், CCTV, கேமரா, ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன என்று நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.

பணியில் உள்ள ஒரு ஐ.ஜி-யின் வீட்டிற்குள் ஆப்பரேஷன் மின்னலால் வெளி மாநிலங்களுக்கு ஓடிப்போன ரவுடிகளும், கொள்ளையர்களும் 24 மணி நேரத்தில் மீண்டும் எப்படி வந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறையின் முக்கிய பொறுப்பாகும். அதை விடுத்து, விடியா திமுக அரசின் விளம்பரக் குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக் கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும். உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிய 2,390 நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்கும் வேலையை காவல்துறை செய்கிறதா என்பதற்கு சரியான விளக்கமில்லை.

இவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன என்பதை விளக்க வேண்டும். இனியாவது சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்