வழிபாட்டு தலங்கள் திறப்பு? சமய தலைவர்களுடன் இன்று தலைமை செயலாளர் ஆலோசனை.!
சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றி சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் வரும் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இதுபற்றி சமய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, சமய தலைவர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கால் மூடப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை வரும் 8ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்றும் அவ்வாறு திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துக்களை பெற 3ம் தேதி (இன்று) மாலை 4.45 மணிக்கு சென்னை தலைமை செயலகம், பழைய கட்டிடம் 2வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் சமய தலைவர்களுடன் எனது தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.