மூக்கு சொறிதல், தலை கோதுதல் கூடாது – தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்..!
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி,கல்லூரிகள் செயல்படாமல் இருந்ததை போன்று அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டிருந்தது.
எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில்,அங்கன்வாடி மையங்களையும் செப்டம்பர் 1 முதல் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,அதற்கான,வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,
- அங்கன்வாடிப் பணியாளர்கள் அங்கன்வாடி மையத்தில் நுழையும்போது தங்களது கைகளை வரையறுக்கப்பட்ட முறையில் சோப்பு கொண்டு 40 நொடிகள் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
- கட்டாயமாக முகக்கவசத்தினை சரியான முறையில் அணிந்த பின்னரே அங்கன்வாடிப் பணியாளர்கள் மையத்திற்குள் நுழைய வேண்டும். மையத்தினை சுத்தம் செய்யும்போதும், காய்கறிகளை கழுவி நறுக்கும்போதும், சமைக்கும்போதும், பரிமாறும்போதும் கண்டிப்பாக முகக் கவசம் உரிய முறையில் அங்கன்வாடிப் பணியாளர்கள் அணிந்திருக்க வேண்டும்.
- மறு சுழற்சி மூலம் பயன்படுத்தும் முகக் கவசம் எனில் தினந்தோறும் சோப்பு கொண்டு துவைத்திருக்க வேண்டும்.
- அங்கன்வாடி மைய வளாகங்கள், சமையலறை, வைப்பறை, குடிநீர் தொட்டி. மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் தட்டு மற்றும் டம்ளர் ஆகியனவற்றை நன்கு தூய்மைப்படுத்தி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதி செய்த பின்னரே பயன்படுத்தப்பட வேண்டும்.
- அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற சமையலுக்கு பயன்படுத்தப்படும் இதர பொருட்களை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி சமையலுக்கு பயன்படுத்துதல் வேண்டும். மேலும், காலாவதியான மற்றும் தரமற்றப் பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது.
- விரல் நகங்களில் நகப்பூச்சு மற்றும் செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக் கூடாது.
- அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் இரண்டு தவணையிலான dosage) கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.
- மூக்கு சொறிதல், தலை கோதுதல், கண்கள், காது மற்றும் வாயினை தேய்த்தல் வளாகத்தில் எச்சில் துப்புதல் மற்றும் மூக்கு சிந்துதல் ஆகிய பழக்கங்களை முன் உணர்வோடு அங்கன்வாடிப் பணியாளர்கள் தவிர்க்க வேண்டும்.
- அப்படி ஏதேனும் தன்னிச்சையாக செய்தாலும் உடனடியாக சோப்பு கொண்டு கை கழுவுதல் வேண்டும்.
- அங்கன்வாடி மையத்தின் அருகில் குப்பைகள், கழிவுநீர், மற்றும் சுற்றித்திரியும் விலங்குகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- 01.09.2021 முதல் அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாரத்தில் 6 நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) மையத்திலேயே சூடான சமைத்த மதிய உணவு காலை 11.30 முதல் மதியம் 12.30 வரை வழங்கப்பட வேண்டும். என்பதால் அங்கன்வாடி பணியாளர்கள் அதற்கு முன்னதாக உணவினை சமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களோ / பாதுகாவலர்களோ குழந்தைகளை மையத்திற்கு வாரத்தில் 6 நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.30 முதல் மதியம் 12.30 வரைக்குள் அழைத்து வந்து மதிய உணவினை மையத்திலேயே உட்கொள்ள செய்ய வேண்டும்.
- மேலும், முட்டை வழங்கப்படும் நாட்களில் வேக வைத்த முட்டையினை மையத்திலேயே குழந்தைகள் உட்கொள்ள செய்திட வேண்டும்.
- முட்டைகளை பயனாளிகளின் வீட்டிற்கு எடுத்த செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
- குழந்தைகள் சாப்பிடும் முன்னரும் சாப்பிட்ட பின்னரும் அவர்களின் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி விட வேண்டும். குழந்தைகளை சாப்பிட உட்கார வைக்கும் போது உரிய சமூக இடைவெளி தவறாது பின்பற்றிட வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி வடிகட்டிய பின்னரே பயன்படுத்துதல் வேண்டும்.
- எக்காரணத்தை முன்னிட்டும் 01.09.2021 முதல் மதிய உணவு உண்ணுவதற்கு தகுதியுடைய அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு பதிலாக உலர் உணவு பொருட்களோ அல்லது அதற்கு ஈடாக உணவு பாதுகாப்பு தொகை வழங்கப்படமாட்டாது.
- இந்திய அரசின் மருத்துவ மற்றும் குடும்ப நலத் துறையால் குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட கொரோனோ நோய் தொற்று வழிகாட்டி நெறிமுறைகளில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதற்கு பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் ‘ அங்கன்வாடி மையங்களுக்கு உணவருந்த வரும் 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.
- ஆனால் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் / பாதுகாவலர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து குழந்தைகளுக்கு மதிய வழங்குவது கட்டாயமாகும்.
- அங்கன்வாடி ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அங்கன்வாடி மையத்திற்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் சமைப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்திட இவ்விவரத்தினை உயரதிகாரிக்கு உடனடியாக தெரிவித்தல் வேண்டும்.
- குழந்தைகள், பெற்றோர் / பாதுகாவலர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மையத்திற்கு வருவதை தவிர்த்தல் வேண்டும்.
-
கொரோனா பெருந்தொற்று தொடர்பாக, அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும்.
மேற்கண்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்துப் பணியாளர்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. pic.twitter.com/khwXzXf1J7
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 25, 2021