இளைஞர்களால் தான் ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க முடியும் – கமல்ஹாசன்!
தர்மபுரியில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் ஊழலற்ற தமிழகத்தை இளைஞர்களால் தான் உருவாக்க முடியும் என கூறி உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சிகளும் தங்களுக்கான வாக்குகளை தற்பொழுது முதலே சேகரிக்க துவங்கிவிட்டனர். பல இடங்களில் அந்தந்த கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தனக்கான வாக்குகளை சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று தர்மபுரியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் ஐந்து இடங்களில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது பேசிய கமல்ஹாசன் அவர்கள், தமிழகத்தில் ஏராளமான நேர்மையானவர்கள் உள்ளனர் என்பதை நம்பித்தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், மக்கள் நீதி மையம் ஆட்சிக்கு வரும் பொழுது தமிழக மக்களின் கல்வி தரமும், வாழ்க்கை தரமும் உயரும் எனவும் கூறியுள்ளார். மேலும் தேர்தலின்போது இளைஞர்களும், இளம்பெண்களும், மகளிரும் வாக்குச்சாவடிக்கு தவறாமல் சென்று வாக்களிக்குமாறு தெரிவித்துள்ள அவர், ஊழலற்ற தமிழகத்தை இளைஞர்களால் தான் உருவாக்க முடியும் எனவும் தமிழகத்தின் அவல நிலையை இளைஞர்கள் தான் மாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.