“தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு,வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு” – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

Default Image

மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

வெறும் ஆயிரம் ரூபாய்:

“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று சொல்லப்படும் இரயில்வே திட்ட புத்தகம் நேற்று மாலை வெளியிடப்பட்டது.அதில் தமிழகத்துக்கான புதிய வழித்தடத் திட்டங்களான திண்டிவனம் -செஞ்சி திருவண்ணாமலை;திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு-புத்தூர்; ஈரோடு- பழனி ;சென்னை -கடலூர்; மதுரை- தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக; ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை- ஆவடி; மொரப்பூர்- தர்மபுரி ஆகிய எட்டு புதிய வழித்தடத்திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எனினும்,ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய வழித்தடத்திட்டத்திற்கு 207 கோடி ரூபாய் தேவை.அதற்கு 59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதை வரவேற்கிறேன். ஆனால்,காட்பாடி -விழுப்புரம் ரெட்டப்பாதை திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்கு 1,600 கோடி தேவை. ஆனால்,வெறும் ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வன்மையான கண்டனம்:

அதேபோல ஈரோடு -கரூர் இரட்டை பாதை திட்டத்திற்கு 650 கோடி தேவை. ஒதுக்கப்பட்டுள்ளது வெறும் ஒரு கோடி ரூபாய். தொடர்ந்து மூன்றாவது பட்ஜெட்டாக இப்படி மிகக் குறைந்த தொகையை தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும்,மதுரை -வாஞ்சி மணியாச்சி -தூத்துக்குடி ரெட்டைபாதையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வாஞ்சி மணியாச்சி நாகர்கோயில் திட்டத்திற்கு 1700 கோடி தேவை.இதுவரை 750 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 360 கோடியும் வரும் ஆண்டில் 425 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. திட்டம் விரைந்து முடிவடைய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இந்தத் திட்டம் முடிவடைந்தால் போக்குவரத்து எளிதாகும்:

மதுரை போடியாகனூர் அகல ரயில் பாதை திட்டம் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாமதமாகிக்கொண்டிருக்கிறது.இது பற்றி பலமுறை முறையீடு செய்ததன் தொடர்சியாக நடப்பாண்டு(2021-22) 104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் ஆண்டுக்கு 125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எங்களது தொடர்ந்த கோரிக்கைக்கு செவிமடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

MP Su.Venkatesan

திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்க்கு 900 கோடி முதலீடு செய்ய வேண்டும் இதுவரை 250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு 700 கோடியும் அடுத்த ஆண்டுக்கு400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் முடிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இந்தத் திட்டம் முடிவடைந்தால் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் இரட்டைப்பாதை முடிவடைந்தது போக்குவரத்து இலகுவாகும்.

தமிழக புதிய வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்