அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் அதிரடி நீக்கம்! அதிமுக வசமாகும் ஒரத்தநாடு?
தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் அமமுகவிலிருந்து நீக்கம்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்படி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகரை அமமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை கட்சியில் நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மா.சேகர் இன்றோ, நாளையோ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் அமமுக வெற்றிபெற்ற ஒரே ஒரு பேரூராட்சி ஒரத்தநாடு மட்டுமே. அமமுக வெற்றி பெற்றிருந்த ஒரு ஒரே பேரூராட்சியும் தற்போது அதிமுக வசம் செல்ல உள்ளது என கூறப்படுகிறது.
மேலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ரெங்கசாமியை இன்று முதல் நியமிக்கப்படுவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைக் கழக அறிவிப்பு:
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.M.சேகர் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார். pic.twitter.com/COUJ9XRa68— AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM (@ammkofficial) April 21, 2023