“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!

அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்

ops -sengottaiyen

தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது இந்த தகவலை மேலும் வலுப்படுத்தியது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை என பல்வேறு யூகங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கட்சியின் 50 ஆண்டுகால விதியை மீறி திருத்தம் செய்ததே அதிமுகவின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என்ற தீர்ப்பு வருவதற்கு காரணம் என சாடியுள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் வெற்றிக்கு வழிவகுக்கும்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். அதிமுக விதியின்படி கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். பொதுக்குழு மூலம் இந்த சட்டத்தை ரத்து செய்யவோ திருத்தவோ கூடாது” எனக் கூறியுள்ளார்.

செங்கோட்டையன் விசுவாசமானவர்

மேலும், செங்கோட்டையன் குறித்து பேசிய ஓபிஎஸ், “செங்கோட்டையன் அந்த கால அதிமுககாரர். கட்சிக்கு மிகவும் விசுவாசமானவர். எந்த நிலையிலும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நினைக்கிறார். செங்கோட்டையன் மீது எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை. அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது. மற்றபடி எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பதற்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஒன்றிணைந்தால் அதிமுகவுக்கு வாழ்வு

அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை. சசிகலா, தினகரனிடமும் பேசியுள்ளேன். அமித்ஷா ஒன்றாக இருக்குமாறு எவ்வளவோ சொன்னார். எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாததன் விளைவு தான் இதெல்லாம். 2026 ஒன்றிணைந்தால்தான் அதிமுகவுக்கு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்