இன்னும் 25 நாள் தான்!! முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கும் விஜய்.!
ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், மண்டல மாநாடு, பொது கூட்டங்களை நடத்த விஜய் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது கட்சியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர், தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இது அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கான திட்டங்களை அவர் வகுத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகன் (தளபதி 69) என்ற இப்படம் நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமாகும். இதனை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.
இந்த படம் அனைத்து வயதினரும், அரசியல் சார்பு உள்ளவர்களும் ரசிக்கும் வகையில் அமையும் என்றும் இயக்குநர் வினோத் குறிப்பிட்டுள்ளார். இதனால், விஜய்யின் திரை வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இதன் பிறகு அவர் சினிமாவிலிருந்து விலகி, அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்த உள்ளார்.
படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த 25 நாட்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முடித்தவுடன், விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த உள்ளார்.
முதலில் தமிழகம் முழுவதும் தனது கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்காக, பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் ஒரு மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இது தேர்தல் பணிகளுக்கான அடித்தளத்தை உருவாக்க உதவும். இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களில் மாநாடுகள் நடத்தி, தனது கட்சியின் கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க அவர் முடிவு செய்துள்ளார்.
மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு, விஜய்யின் அரசியல் நுழைவு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.