ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி – அமைச்சர் அன்பில் மகேஷ்
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வெகுநேர முகக்கவசம் அணிய முடியாது என்பதால் அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதன் பின்னர் நோய்த்தொற்று குறைந்ததால் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்.1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்படி, மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கு அறிவிப்பில், நவம்பர் 1 முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்புப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.