ஆன்லைன் ரம்மி – ஆளுநர் மாளிகை முன் இன்று ஆர்பாட்டம்..! – மதிமுக
ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்து ஆளுநர் மாளிகை முன் இன்று ஆர்ப்பாட்டம்.
ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது.
தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய அவசர சட்ட முன் வரைவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவை அக்.28-ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தமிழக அரசு விளக்கம் தந்தும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை.
ஆளுநர் வழக்கம்போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய்விட்டது. ஆன்லைன் விளையாட்டால் பெண் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்து டிசம்பர் 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகை முன் ஆர்பாட்டம் நடைபெறும். திராவிட கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அறிவித்துள்ளார்.