ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் எதிரொலி; கேம் பட்டியல் தயாரிப்பு.!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை, நடைமுறைப்படுத்தும் பணியில் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. இதன்படி சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம், சட்ட விதிகளின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக 2-வது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நேற்றே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று மகிழ்வுடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசிதழில் தடை சட்டம் வெளியிடப்பட்டதை அடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் காவல்துறை தொடங்கியுள்ளது. இதன்படி இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கன் செயலிகள் மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியில் சைபர் கிரைம் காவல்துறை பிரிவு தீவிரமாக இறங்கியுள்ளது.
கணக்கெடுக்கப்பட்டு விளையாட்டுகளின் பட்டியல் தயார் செய்யப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும் அடுத்ததாக ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவோரை கண்டறியவும் காவல்துறை திட்டம் வகுத்துள்ளது.