#BREAKING: ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது ..!
இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார்.
3-வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இன்று 2 முக்கிய சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதலமைச்சர் இன்று தாக்கல் செய்வதாகவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களின் பதவியை வரும் ஜூன் வரை நீட்டிக்கும் மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்வார் என கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஆக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி ஆன்லைனில் சூதாடுவதற்கு ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை எனவும் ஆன்லைன் ரம்மி விளையாட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் மசோதாவும் தாக்கல் ஆனது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவரச சட்டத்தை பிறப்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.