பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதி ரேண்டம் எண் வழங்க திட்டம்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தாலும், ஆன்லைன் மூலம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்திருந்த நிலையில், தற்போது பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் தொடங்கியுள்ளது. இதனை https://tneaonline.org என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆகஸ்ட் 25-ம் தேதி ரேண்டம் எண்ணும், செப்டம்பர் 4-ம் தேதி தரவரிசைப் பட்டியலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வு வரும் செப் 7-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், அக்.12-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.