தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிக்காலம் 3 ஆண்டுகளா? அண்ணாமலை பேட்டி
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமசோதாவின்படி 2031இல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பதவி காலம் என்பது 3 ஆண்டுகள் வரை மட்டுமே இருக்கும் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பொருட்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் அதிகம் பேர் ஆதரவாக வாக்களித்திருந்தாலும் அதிகமானோர் எதிர்ப்பு வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ” இந்திய அரசியமைப்பு சட்டப்பிரிவு 327ஆனது ஒரு தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என கூறுகிறது. அந்த சட்டப்பிரிவின்படி இந்தியாவில் 543 மக்களவை தொகுதி என்பது இன்னும் அதிகரிக்கப்போகிறது எனக் கூறுகிறது. தொகுதி மறுவரையறைக்கு பிறகு இந்த நடைமுறை என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் 2029இல் முடிவுக்கு வரும். அதற்குப்பிறகு ஒரு பாராளுமன்ற தேர்தல் நடக்கும். அந்த தேர்தல் பதவி காலம் எவ்வளவு காலமோ , அதே கால அளவு தான் மற்ற அனைத்து சட்டமன்றங்களுக்கும். உதாரணமாக தமிழகத்தை எடுத்துக்கொண்டால், 2026இல் சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதன் பதவிக்காலம் 5 ஆண்டுகாலம் ஆகும். 2031 வரை இந்த ஆட்சி இருக்கும்.
இந்த மசோதா என்ன சொல்கிறது என்றால், 2031இல் நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பதவி காலம் எவ்வளவு என்றால், 2029 நாடாளுமன்ற தேர்தல் பதவி காலம் எவ்வளவோ அது வரையில் மட்டுமே இருக்கும். அதாவது 3 ஆண்டுகள். 2034இல் மக்களவை தேர்தல் பதவிக்காலம் முடியும். அப்படியென்றால் 2031இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் பதவிக்காலம் என்பது 2034இல் நிறைவு பெரும்.
இதனை தான் நிறைய அரசியல் கட்சித் தலைவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். தவறாக பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே இதனை திரித்து பேசுகிறார்கள். ” என அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.